
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடர்பான சர்வேதச திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் கத்தார் நாட்டு ஊடக நிறுவனமொன்று ஈடுபட்டுள்ளது.
'நபியவர்களது பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வின் அனைத்துப் பகுதிகைளயும் இத்திரைப்படம் கவனத்தில் கொள்ளும்' என அந்நூர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அஹ்மத் அப்துல்லாஹ் அல் முஸ்தபா அல் ஜஸீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். 'நபி (ஸல்) அவர்களது மனிதாபிமான உணர்வை இத்திரைப்படம் வெளிக்கொண்டு வரும்' எனவும் அவர் தெரிவித்தார்.
150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்படவுள்ள இதன் படப்பிடிப்புப் பணிகள் 2011ல் தொடங்கப்படும். 25-30 மாதங்களில் இதன் தயாரிப்புப் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த திரைப்படத்திற்கான அமெரிக்க அகடமி விருது பெற்ற தயாரிப்பாளர் பெரி எம். ஒஸ்போன் இதன் தயாரிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னணி இஸ்லாமிய அறிஞரான ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி இதன் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வை செய்வார். 'இதன் திரைக்கதை ஒளிப்பதிவு தயாரிப்புப் பணிகைள மேற்பார்வை செய்வதற்கென ஒரு குழுவை உருவாக்குவதற்கு ஷெய்க் கர்ளாவியுடன் நாம் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்' என அப்துல்லாஹ் மேலும் தெரித்தார்.
டென்மார்க் கார்டூன் விவகாரம் உலகளவில் ஏற்படுத்திய பல்வேறு உணர்வலைகளின் ஆக்கபூர்வமான எதிர்வினையாக இத்திரைப் படத் தயாரிப்பு முயற்சியைக் கருதலாம். இது ஆங்கில மொழியில் அமையவுள்ளது.